
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று (08) காலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
போராட்ட குழுவினர், தனியார் கல்வி நிறுவனமான இராஜேஸ்வரி கல்வி நிலையத்திற்கு பேரணியாக சென்று அங்கு தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கொட்டாஞ்சேனை கல்பொத்தானையில் அமைந்துள்ள மரணித்த சிறுமியின் வீட்டிற்கு பேரணியாக சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் அங்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் கருத்து தெரிவிக்கையில், மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பபட்ட அனைவருக்கும் தகவல்களை வழங்குவதாக குறிப்பிட்டனர்.
போராட்டத்தின் இறுதியில், இறந்த மாணவிக்கு தத்தமது சமய அனுட்டானங்களின் படி ஆத்ம சாந்தி பிரார்த்தனையை வருகை தந்த அனைவரும் நிகழ்த்தினர்.
அத்துடன் பேராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டடிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.