
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டபோது கருத்து வெளியிட்ட முஜிபுர் எம்.பி,
இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை என்று குற்றம்சுமத்தினர்.
நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு 7, 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்கு இடப்படுவார்களா என்று கேள்வியெழுப்பிய எம்.பி முஜிபுர், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல எனவும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நயக்க குறிப்பிடுகையில், குறித்த பிரச்சினையில் அரசியல் இலாபம் தேடக்கூடாதென கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.