நாட்டிலுள் பல வைத்தியசாலைகளில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ள போதிலும் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இவ்வாறு பல்வேறு வைத்தியசாலைகளில் குழந்தை மரணங்கள் இடம்பெறுகின்றன.
எனினும், அதற்கான முறையான பரிசோதனை அறிக்கைகள் வெளியிடப் படவில்லை என சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கத்தின் முக்கியஸ்தர், வைத்தியர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.
இந்நிலை தொடருமாயின் குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார் உள்ளிட்டோர் மரணிக்கக் கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வைத்தியர் சமல் சஞ்ஜீவ மேலும் தெரிவிக்கையில்,
நாடு சுகாதாரத் துறையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளது. மேலும் மருந்துத் தட்டுப்பாடு, தரமற்ற மருந்துப் பாவனை மற்றும் அதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் நோயாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கிளிநொச்சி பகுதியில் நான்கு சிசு மரணங்கள் சம்பவித்துள்ளன. எனினும் இம்மரணங்களுக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதால் பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் இரு மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் நிபுணர் குழுவின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த மருந்துகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை நிராகரித்த காரணத்தினாலேயே மரணங்கள் சம்பவித்துள்ளன.
இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் இருவர் உயிரிழந்தபோது அந்த மருந்தினை தடை செய்ய முடிந்தது. அந்த மருந்துகளை தடைசெய்தமையாலேயே அதற்கு அடுத்த மரணங்கள் பதிவாகாமல் தடுக்க முடிந்தது.
இவ்வாறு காரணங்கள் கண்டறியப்பட்டிருப்பின் மேற்படி அப்பாவிகளின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.