நிவாரண விலையில் உணவுப் பொதி வழங்கும் திட்டம்- அரசுக்கு தேர்தல் ஆணைக்குழு வழங்கிய உத்தரவு!

எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்குவதற்கு அரசு எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்பு நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு அமைவாக அஸ்வெசும நலன்புரி உதவிகளுக்காக புதிய விண்ணப்பங்களை சமர்ப்பித்த 812,753 விண்ணப்பதாரர்களில், தகுதியான பயனாளிகளுக்கு இந்த உணவுப் பொதி வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களை நிவாரண விலையில் 2,500 ரூபாவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிவாரண விலையிலான உணவுப் பொதி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் லங்கா சதோசா மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் அவற்றை விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்குவதற்கு அரசு எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply