உதவித்திட்டத்தில் முறைகேடு – வீதிமறியல் போராட்டத்தில் மக்கள்!

வவுனியா – ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அதன் போது, வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதி போராட்டக்காரர்களால்  முடக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்றைய தினம் காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை இடம்பெற்றுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்டக் கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்தது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள நலன்புரி உதவித் திட்டப் பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்து வவுனியாவில் மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த போராட்டம் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், 30 நிமிடங்களின் பின்னர் பேரணியாகச் சென்று வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியினை முற்றுகையிட்டு  முன்னெடுக்கப்பட்டது.

அதனையடுத்து, போராட்ட இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஆசிகுளம் கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, மேன்முறையீடு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மற்றும் அதற்குரிய உதவிகளைப் பெற்றுத்தருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் மேலும் இறுதிப்பட்டியல் வரும் வரை காத்திருக்குமாறும் ஆசிகுளம் கிராம சேவையாளர் தெரிவித்தமையினையடுத்து காலை 11.00 மணியளவில் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தின் போது, இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குப்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்து ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த மக்களினால் இந்த கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply