இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் சுதுமலை பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று காலை சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நிறுவனமயப்படுத்தப்பட்ட பல விடயங்களிலே நாடாளுமன்றம் மட்டுமல்ல நீதித்துறையும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.
அதைக்குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக நாட்டின் சரித்திரத்தில் நீதிபதி ஒருவர் தான் வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையிலே வந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு ஓடியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
இது நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிலே இருக்கின்ற சுயாதீனமான நிறுவனங்களை பாதுகாக்க வேண்டிய பாரிய கடைப்பாடு அனைவருக்கும் இருக்கின்றது.
அத்தகைய சுயாதீனமான நிறுவனங்களிலே பிரதானமானது நீதி துறையாக இருக்கின்றது. நீதித்துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தாங்கள் கண்டிக்க வேண்டும் தடுக்க வேண்டும் அதே வேளையிலே நீதித்துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே தாங்கள் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது மூன்று விதமாக அவர்கள் செயல்படலாம் எனத் தெரிவித்த அவர், ஒன்று அந்த அச்சுறுத்தலை கணக்கில் எடுக்காமல் தாங்கள் செய்ய வேண்டியதை செய்வது, இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் இராஜினாமா செய்து அதிலிருந்து விலகி ஓடுவது, மூன்றாவது நிலைப்பாடு நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப்பொம்மையாக இயங்குவது. அதுவும் தடுக்கப்பட வேண்டும்.
நீதித்துறையை பாதுகாப்பது என்றால் நீதிபதிகள் என்ன செய்தாலும் அவர்களை பாதுகாப்பதல்ல நீதிபதிகள் சுயாதீனமாக செயல்படுவதை பாதுகாப்பது எனத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை வெளியாகியுள்ள இந்த செய்தியின் காரணமாக முக்கியமான எச்சரிக்கையை இந்த வேளையில் கொடுக்க வேண்டும் என தான் நினைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியலை அரசியல்வாதிகளிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் மற்ற வேலைகளை பார்ப்போம் என்று ஒன்று சொல்லப்பட்டிருக்கின்றது, அரசியல் என்பது அரசியல்வாதிகளின் கைகளில் விட்டு விடுவதற்கான இலகுவான விடையம் அல்ல, அது அதி முக்கியமான ஒரு விடயம்.
அரசியல் என்பது மக்களுடைய ஆணையை, மக்களுடைய விருப்பத்தை தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக செயற்படுத்துகின்ற ஒன்று, அது மக்களுக்காக இயங்குகின்ற ஒன்றாக இருக்க வேண்டும் மக்கள் அதில் தொடர்ந்து ஈடுபடுகின்றவர்களாக இருந்தே ஆக வேண்டும்.
தமிழ் மாணவர்கள் சிங்களம் பயில்வதும், சிங்கள மாணவர்கள் தமிழ் பயில்வதும் இதிலே இவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்து இருப்பதும் ஒரு அரசியல் விடயம் எனத் தெரிவித்துள்ளார்.