கிழக்கு மாகாணத்தில் அழிந்து வரும் தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தன்னைக் கொன்று தின்னப் பார்க்கிறார் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் இவருடைய செலவுக்கு பணம் அனுப்புகின்றன.
விகாரைகளை கட்டி நாட்டின் புத்த சாசனத்தையும் தேசத்தையும் காக்கும் எனக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் எந்தவித ஆதரவோ, நிறுவன ஆதரவோ இன்றி நான் இந்த வெஹெர விஹாரஸ்தானத்தை அபிவிருத்தி செய்து கிழக்கு மாகாண சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான பிரச்சினைகளை கையாள்கின்றேன்.
எனவே இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது எனக்கு நிதி ரீதியாக மிகவும் கடினமாக உள்ளது.
வடமாகாணத்தில் இக்கோயில்களைப் பாதுகாத்து சிங்கள தேசத்தைப் பாதுகாப்பது அவசியமானதனால், பௌத்த விகாரையைப் பாதுகாக்க அனைத்து மக்களும், உலக மக்களும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.
என்னையும், தாராள நன்கொடையாளர்களையும் இணைத்துக் கொள்ளுமாறு நிறுவனங்களையும் அன்புடன் அழைக்கிறேன்.
இது எனது வருத்தத்தைப் பற்றி கருத்து தெரிவிப்பதற்காக மட்டும் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவும் கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.