77வது சுதந்திர தினம் இன்று!

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று (04) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது.

77வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் முதன்மை நோக்கமாக, “நாட்டின் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படும் நாடொன்றை உருவாக்குதல்” என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

இன்று காலை ஏழு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி, ஜனாதிபதியால் தேசிய கொடி ஏற்றப்பட்டதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட உள்ளது. அதனை அடுத்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் உரையை அடுத்து முப்படைகளின் படை அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சுதந்திர தின கொண்டாட்டங்கள் 9.40 மணியளவில் நிறைவடையவுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது சுதந்திர தின கொண்டாட்டம் இதுவாகும்.

இந்த ஆண்டு சுதந்திர தினம் குறைந்த செலவில் நாடாத்தப்படுவதுடன், விசேட போக்குவரத்து திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்காக விமானப்படையின் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரமே பயன்படுத்தப்படவுள்ளன. கடந்த ஆண்டு 19 உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், இம்முறை எவ்வித வாகன அணிவகுப்பும் இடம்பெறாது என குறிப்பிடப்பட்டது.

அத்துடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு விசேட சந்தர்ப்பம் வழங்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் கைதிகளுக்கு வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply