
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிறுவுவது தொடர்பில் பார்வையிட, இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர் இன்று (10) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிறுவுவதற்காக ஒதுக்கப்பட்ட மண்டைத்தீவில் உள்ள ஒரு நிலத்தை ஆராய்வதற்காக இந்த குழுவினர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.
இந்த விஜயத்தில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மனாடா யஹம்பத் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, குறித்த காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும், அந்த இடத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்து, வடக்குப் பிராந்தியத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அதற்கான வசதியின் மேம்பாட்டுக்கான ஆரம்பத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததோடு, இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய, யாழில் நிறுவப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானத்திற்காக கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த முயற்சியானது வடக்கு மாகாணத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும், கிரிக்கெட் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்ப்பதாக விளையாட்டு அமைச்சர் சுனில் கமகே தெரிவித்தார்.