
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் துறையினரால் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பிள்ளையானின் நெருக்கமான சகா ஒருவர், தனது சுய விருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
பிள்ளையான் – கம்மன்பில சந்திப்பின்போது பிள்ளையான் அழவில்லை.
குறித்த சந்திப்பின் போது அருகில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் தான் இது தொடர்பில் வினவியதாகவும் தெரிவித்தார்.
ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணையை குழப்பும் வகையில் கம்மன்பில செயற்படுகிறார்.
பிள்ளையானுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர் விசாரணைக்கு சுயமாகவே வருகிறார் என்றால் அவர்கள் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.