இலங்கை- இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்!

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி, வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

குறித்த மனு நேற்று (07) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவை பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், நாட்டின் அரசியலமைப்பிற்கும் சர்வதேச சட்டத்திற்கும் முரணானது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இது மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும் என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் கையெழுத்திடும் அரசின் நடவடிக்கை முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் ஊடாக தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், அந்த ஒப்பந்தங்களை செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

அத்துடன் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக பிரதிவாதிகளிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வசூலித்து உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply