
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் எதர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.
இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் குமார ஜயக்கொடி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றாலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு மின்சாரக் கட்டணங்களிலிருந்து கிடைக்கும் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
இந்த விடயம் குறித்து அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் சரியான கருத்தை தெரிவிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.
வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நாங்கள் உண்மையிலேயே விரும்புகிறோம். அதுதான் எங்கள் முதன்மையான குறிக்கோள்.
நாங்கள் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது என்ற நோக்கத்துடன் தான் செயல்படுகிறோம்.
நாங்கள் எங்கும் IMF கூறியதாக அதிகரிக்கவில்லை. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மின்சார சபை இன்னும் கணக்கீடுகளை சமர்ப்பிக்கவில்லை.
இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொதுப் பயன்பாட்டு ஆணையக்குழுவிடம் அதனை பெற்றுக்கொள்வோம்.
அடுத்த மாத தொடக்கத்தில் நாங்கள் இந்த விடயம் தொடர்பில் உங்களுக்கு கூறமுடியும். அரசாங்கம் எதிர்மறையான இடத்தில் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.