தலதா கண்காட்சியை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை!

தலதா கண்காட்சியை முன்னிட்டு இன்று (17) முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலதா கண்காட்சியை முன்னிட்டு, யாத்திரைக்கு வருவோரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கண்டி நகருக்குள் வருவதால், ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கண்டி நகருக்குள் நுழையும் வாகனங்கள் இன்று முதல் மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாத்திரிகர்கள் வருகை தரும் வாகனங்களுக்கு என்று விசேட வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளிலிருந்து ஸ்ரீ தலதா மாளிகைக்கு பேருந்து சேவைகள் மூலம் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்குப் பின்னர், யாத்திரிகர்களை வாகன நிறுத்துமிடத்திற்குத் திருப்பி அனுப்புவதற்காக பொதுப் போக்குவரத்து சேவை செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் தயாள் இளங்கக்கோன் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி, ஏப்ரல் 18ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், 19ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் இடம்பெற உள்ளது.

இதன் காரணமாக, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.

மக்களை சோதனை செய்தல், போக்குவரத்து கட்டுப்பாடுகள், வீதித் தடைகள் அமைத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 10,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவ, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் மக்கள் வெள்ளை நிற உடையை அணிய வேண்டும் என்றும், பாரிய பொருட்கள், கேமராக்கள், காணொளி உபகரணங்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply