
எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து அஸ்வெசும திட்டத்தில் 400,000 புதிய பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
எமது ஆட்சியில்,
எரிபொருள் விலையைக் குறைத்தோம்,
மின்சார விலையைக் குறைத்தோம்,
அஸ்வெசும கொடுப்பனவை உயர்த்தினோம்.
பாடசாலைப் பிள்ளைகளுக்கு சீருடை மற்றும் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு கொடுப்பனவு வழங்கியுள்ளோம்.
மன்னார் – இராமேஸ்வரத்திற்கு இடையில் மீண்டும் படகு சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் புத்தளம் – மன்னார் பாதையை இணைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தார்.
மேலும், வடக்கில் இடம்பெற்ற போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது என்றும் கூறிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.