
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, வெல்லம்பிட்டிய, மீதொட்டமுல்லவில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால், பிஸ்டல் ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு ஒரு விருந்தின் போது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நடாத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த காஞ்சிபானை இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.