மீளவும் தோண்டி எடுக்கப்பட்ட நிமேஷ் சத்சரவின் உடல்!

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீளவும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவின் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்த பணிகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், 11.40 மணியளவில் நிறைவடைந்திருந்தன.

இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா கடந்த ஒன்பதாம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

இளைஞனின் மரணம் தொடர்பாக சட்ட மருத்துவ அதிகாரி நடாத்திய பிரேத பரிசோதனை திருப்திகரமாக இல்லாததால், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடாத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் மருத்துவ குழுவை நியமிக்க உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு உள்ளிட்ட முந்தைய விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர் நீதவான் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

நீதிமன்றின் உத்தரவின்படி, தலைமை தடயவியல் மருத்துவர் பிரியந்த அமரரத்ன, மூத்த சிறப்பு தடயவியல் மருத்துவர் பி.ஆர். ருவன்புர மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் நிபுணர் வைத்தியர் முதித விதானபத்திரண ஆகியோர் நிபுணர் தடயவியல் மருத்துவ குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவால் நடத்தப்பட்டன. ஆனால் பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், விசாரணை ஏப்ரல் 04ஆம் திகதி முதல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த 01ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் பொலிஸ் காவலில் இருந்த போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, 02ஆம் திகதி அதிகாலையில், சந்தேகநபரான இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply