
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதனை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு இன்றையதினம் (25) நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதனை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு சபாநாயகரால் நியமிக்கப்பட்டது.
2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 05ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 3 (ஈ) மற்றும் 3(உ) பிரிவுகளிற்கு அமைய துர்நடத்தை மற்றும் பதவியின் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு குறித்த சட்டத்தின் 5வது பிரிவுக்கு அமைய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கடந்த 08ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் மூவரடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புக்குழுவின் இணை உறுப்பினர்களாக நீதியரசர் (ஒய்வுநிலை) எம்.என்.பி.இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் எம்.லலித் ஏக்கநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த விசாரணைக் குழு புதன்கிழமை (23) நாடாளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடிக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசபந்து தென்னகோன் இன்று (25) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் கைது செய்யபட்டது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி பிணை வழங்கிய போது, நீதவான் அவருக்கு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என தெரிவித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 21ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தது.
அதன்படி, மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.
தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்டபோது, பிணை வழங்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் வரை அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் நீதவான் அதற்கு மறுப்பு தெரிவித்து, தேசபந்து தென்னகோன் ஒரு வழக்கில் சந்தேக நபராக இருப்பதாகவும், எனவே அவருக்கு விசேட பாதுகாப்பை வழங்குவது ஏனைய சந்தேக நபர்களுக்கு பாதகமாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டினார்.
நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்ததன் பின்னணியில், தேசபந்து தென்னகோன் நீதிமன்ற வளாகத்தின் பின்புறமாக கார் ஒன்றை வரவழைத்து அதில் ஏறி நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை வழங்கியது.
இந்த நிலையில் அழைப்பாணை விடுக்கப்பட்ட தேசபந்து தென்னகோன், இன்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு பிரதான வாயில் வழியாக வருகை தந்ததாக தெரியவருகிறது.
இன்றைய தினம் மாத்தறை நீதிமன்றத்தின் பிரதான வாயிலிலும் அதைச் சுற்றியும் இன்று விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் வாகனங்களும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.