
35 வருடங்களுக்கு பின்னர் நிபந்தனைகளுடன் பலாலி வீதி விடுவிக்கப்படத்தைத் தொடர்ந்து, அவ்வழியினூடாக அரச பேருந்து சேவை இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கமைய, இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்கவின் பிரசன்னத்துடன் இன்று அரச பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அரச பேருந்து சேவையானது இரு வழித்தடங்கள் ஊடக முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மானிப்பாய் – ஆலங்குளாய் – அளவெட்டி ஊடாக தெல்லிப்பழை நோக்கி முன்னெடுக்கப்படும் வகையில் ஒரு பேருந்து சேவையும்,
காங்கேசன்துறையில் இருந்து பலாலி வீதியூடாக மற்றொரு பேருந்து சேவையுமே இவ்வாறு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரச பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பேருந்து சேவை நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தரப்படும் என பிராந்திய முகாமையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.