பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்- சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு!

அண்மைக்காலமாக பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக் கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளதுடன், பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பகிடிவதை தொடர்பாக கூறுகையில்,

எந்தவொரு கல்வியியல் அமைப்புகளிலும் எந்தவொரு மாணவருக்கு எதிராகவும் பகிடிவதை மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இது நாட்டின் சட்டத்தை மாத்திரமன்றி, அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளையும் மீறுகின்ற செயலாகும்.

அத்துடன் 1998ஆம் ஆண்டு 20ஆம் இலக்க கல்விக்கட்டமைப்புக்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வன்முறை தடுப்புச்சட்டத்தின் சரத்துக்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கிறோம்.

இவ்வாறான சட்டவிரோத பகிடிவதை செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி அமைப்புக்களின் அதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply