
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் எனவும், இது தொடபில் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி 16 வயதான மாணவி அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன’
குறித்த மாணவி முதலில் தென் கொழும்பின் பிரபல மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயின்றபோது கடந்த வருட இறுதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம், அதுகுறித்து கல்வி வலயம், பாடசாலை, பொலிஸ், நீதிமன்ற விசாரணை விபரங்களை தான் பெற்றுக்கொண்டுள்ளதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ‘இத்துயர சம்பவத்தால் பிள்ளையை இழந்து வாடும் பெற்றோருக்கு பிள்ளையை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியாது. அது மிகப்பெரும் துயரம். காலம் தான் அவர்களுக்கு ஆறுதலளிக்கவேண்டும்’ எனவும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 18 வயதை அடையாத அம்மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவரது அகால மரணத்துக்குக் காரணமான சகல நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும், இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வாரம் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.