
“நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய வெசாக் வாரம் இன்று (10) முதல் ஆரம்பமாகி, வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு அரச வெசாக் மகோற்சவம் நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி, இலங்கை முழுவதற்குமான சாசன பாதுகாப்பு மன்றம், ஜனாதிபதி அலுவலகம், பௌத்த, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த விவகார திணைக்களம், மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
அரச வெசாக் மகோற்சவ காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் இன்னும் முடிவடையாத சில விகாரை அபிவிருத்தி திட்டங்கள் முப்படைகளின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படவுள்ளன.
இதற்கிடையில் வெசாக் வாரத்தை முன்னிட்டு, மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களுக்கு நாடு முழுவதிலுமுள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள், சூதாட்ட விடுதிகள், கெசினோ மண்டபங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், சூதாட்ட விடுதிகள், கெசினோ மண்டபங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.