
மண்டைதீவில் “நெய்தல் சூழல்நேய பூங்கா” சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு பல திட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதன் திறப்பு விழா நேற்று (09) இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம், யாழ் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ள “நெய்தல் சூழல்நேய பூங்கா” வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் அவர்களினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
இந்த பூங்கா 2 ஆண்டுகளில் 7 கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் அவர்கள் உரையாற்றுகையில்,
யாழ். மாவட்டச் செயலராக நான் பணியாற்றிய காலத்தில் இந்தப் பகுதியில் சுற்றுலாத்துறைக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. துரதிஷ்டாவசமாக அப்போதிருந்த பிரதேச சபை நிர்வாகம் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை.
பல முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக வருகின்ற போதும் எமது திணைக்களங்களால் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கப்பெறவில்லை. தமது பகுதிகளுக்கும், சபைகளுக்கும் வருமானத்தை ஈட்டி தரக்கூடிய முதலீட்டாளர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு தயக்கம் காண்பிக்கின்றனர். இழுத்தடிப்புச் செய்கின்றனர். எமது நிர்வாகங்களின் அசமந்த போக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலைமை தொடருமானால் இங்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு தயங்குவர். அது எமது மாகாணத்தை பலவகையிலும் பாதிக்கும். இளையோருக்கு வேலைவாய்ப்பு தேவை என்று நாம் கோரும் அதேவேளை அதற்கு முதலீடு தான் வழியாக இருக்கும் நிலையில் அதனையும் இழப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா போன்று பல வேலைத் திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று நம்புகின்றேன். அத்துடன் இந்த பிரதேசத்தில் இவ்வாறான முயற்சியை மேற்கொண்டுள்ள ‘நெய்தல் சூழல்நேய பூங்கா’வின் நிறுவுனர் அனுராஜ்க்கும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என கூறியிருந்தார்.