
புனித வெசாக் தினம் இன்று (12) கொண்டாடப்படுகின்றது.
பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை இன்று அனுஷ்டிக்கின்றனர்.
புத்த மதத்தில், குறிப்பாக தேரவாத பௌத்தத்தில், புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவற்றை நினைவுகூரும் நாளாக வெசாக் தினம் காணப்படுகிறது.
கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த ஒரு இளவரசராக சித்தார்த்தர் வளர்ந்து வந்தார். செல்வமும் ஆடம்பரமும் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை சித்தார்த்த கௌதமர் உணர்ந்து, அவை அனைத்தையும் இழந்து துறவறத்தை மேற்கொண்டார்.
அவரது ஆறு வருட படிப்பின் பின்னர் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டறியும் இலக்கை அடைந்தார். அதாவது ஞானத்தை அடைந்தார் என கூறப்படுகிறது. இவ்வேளையில் தான் அவர் புத்தரானார்.
பௌத்த தர்மமானது இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது இவ்வாறானதொரு பௌர்ணமி தினத்திலேயே ஆகும். முதலாவது வெசாக் கொடியானது 28 ஆம் திகதி மே மாதம் 1885 ஆம் ஆண்டு ஏற்றி வைக்கப்பட்டது.
“வெசாக்” மே மாத பெளர்ணமி (முழு நிலா) நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (பரிநிர்வாணம்) ஆகியவற்றை நினைவுறுத்தி இலங்கையில் பெளத்த மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள். ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.
கௌதம புத்தர் அவர்கள் அருளிச் சென்ற தத்துவங்கள் எண்ணிலடங்காதவை. அவைகள் எக்காலத்துக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.
மனிதன் உயர்வதும் தாழ்வதும் அவனது பிறப்பால் அன்றி, அவனது செயலாலேயே என்பதே புத்த பகவான் அருளிய போதனையின் அடிநாதமாகும்.
கௌதம புத்தரின் போதனைகள் மனிதனையும் சமூகத்தினையும் நல்வழிப்படுத்தும் உன்னதமான நற்கருத்துக்களைக் கொண்டவை. இவரது போதனைகளை சரியாக பின்பற்றி வாழுகின்ற பொழுது மக்கள் மத்தியில் மன அமைதி, சகோதரத்துவம், மனித நேயம், ஒற்றுமை, நட்புணர்வு ஆகிய பண்புகள் உயர்ந்த நிலையில் மேம்படும் என்பதில் சந்தேகம் இல்லை.