சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று சிறப்புரிமை ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய நிலையில்,அவர் அறிக்கை ஒன்றை முன்வைத்தார்.
அதில் மருதங்கேணியில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
மேலும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
தான் சபாநாயகரைத் தொடர்பு கொண்ட போதும், அவரின் தொடர்பு கிடைக்காமையால், பிரதி சபாநாயகருடன் தொடர்பு கொண்டு, நாடாளுமன்றில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய பின்னர், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் 12 ஆம் திகதியன்று வாக்குமூலம் வழங்க உடன்பட்டதாக கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்தார்.
எனினும், இதனைப் புறக்கணிக்கும் வகையில், தன்னை மருதங்கேணி பொலிஸ் அதிகாரிகள், கொழும்பில் உள்ள வீட்டில் வைத்து, நேற்றுக் காலை கைது செய்தனர் எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.
தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் சபாநாயகரைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதாகவும், இதன்போது, கைதுக்கான நீதிமன்ற உத்தரவு சமர்ப்பிக்கப்படாவிட்டால், நாடாளுமன்றத்துக்கு வந்து சிறப்புரிமை பிரச்சினையை எழுப்புவதைப் பொலிஸார் தடுக்க முடியாது எனவும், சபாநாயகர் உறுதியளித்திருந்தார் என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்தார்.
எனினும், அதனையும் மீறி பொலிஸாரின் உயர்மட்ட கட்டளையின்படி, தான் கைது செய்யப்பட்டதாகவும் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்தார்.
எனவே, தனது கைது சட்டவிரோதமானது என்றும், இது தொடர்பில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில், கஜேந்திரகுமாரின் அறிக்கைக்குத் தான் பதில் வழங்கப்போவதில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில், நாடாளுமன்றச் சிறப்புரிமை குழுவுக்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன உறுதியளித்தார்.