வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழத் தேசியக் கட்சிகள் முழுமையான ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன.
குறித்த கதவடைப்புப் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்கள் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் ஒரு சர்வதேச விசாரணையைக்கோரி நிற்பதை தாம் வரவேற்பதோடு, அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், அவர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எனினும், அவர்கள் கதவடைப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானம் எடுத்திருப்பதை தாம் ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
போராட்டத்திற்கான அழைப்புத் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில், இது இன அழிப்பிற்குள்ளாகிய தமிழ் மக்களின் துக்க காலம் எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிகோரி போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நாளைய தினத்தை துக்க தினமாக அறிவித்துள்ளமையை தாம் ஆதரிப்பதோடு, பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்
தமிழர் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை இலங்கையின் கறைபடிந்த வரலாறே எனத் தெரிவித்துள்ளார்.
அந்த ஆத்மாக்களுக்கு ஆறுதலும் வருங்கால தமிழினத்திற்கு நீதியும் விடுதலையும் கிடைக்க வேண்டி நடைபெறும் கிளர்ச்சிகளையும், போராட்டங்களையும் ஆதரித்து கடைப்பிடிக்க வேண்டியது தம் கடப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் சங்கங்களின் தலைவிகள் இணைந்து கூட்டாக கதவடைப்புப் போராட்டத்திற்கான அழைப்பு விடுத்துள்ளனர்.
போராட்டம் வெற்றியடைய வடக்கு கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் நீதி, நேர்மையை விரும்புகின்ற சிங்கள மக்கள் என அனைவரும் தங்களின் பூரண ஆதரவை வழங்க வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.