அரசாங்கம் மக்களுக்கு பொய்களை கூறி ஏமாற்றியுள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (7) இடம்பெற்ற வருட ஆரம்பத்தின் நிதி நிலைமை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிவப்பு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாகவும் நாட்டு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள சூழலில் 265 ரூபாவாக்கு சிவப்பு அரிசி விற்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தெற்கில் வாழும் நாம் சிவப்பு அரிசியைதான் தினமும் உண்கிறோம். சிவப்பு அரிசியை நாம் உண்கிறோம் என்பதால் எமக்கு சிவப்பு அரிசியைதான் வழங்க வேண்டும். ஆனால், சந்தையில் சிவப்பு அரிசி இல்லை.
இந்த அரசாங்கம் அமையப்பெற்று மூன்று மாதங்கள் கடந்துள்ளன. இப்போது அரிசி இல்லை எனக் கூற முடியாது. சிவப்பு அரிசியை இறக்குமதி செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. தற்போது நாட்டில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லுக்கான கொள்வனவு விலையாக 110 ரூபாவை நிர்ணயிக்க உள்ளதாக தெரியவருகிறது. தேர்தல் காலத்தில் இந்த அரசாங்கம் மக்களுக்கு பொய்களை கூறியே ஏமாற்றியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள்கூட 130 ரூபாவுக்குதான் நெல் கொள்வனவு செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்காக போராடுகிறோம் எனக் கூறியவர்கள் 110 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் காலத்தில் அரசாங்கம் கூறியதற்கும் தற்போது அவர்கள் நாடாளுமன்றில் முன்வைக்கும் விடயங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளிகள் உள்ளன. செய்ய முடியாதவற்றை மக்களுக்கு பொய்களை கூறியே இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.” என்றார்.