இன்று மகளிர் தினம்!

உலகெங்கும் ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் திகதியன்று மகளி்ர் தினம் கொண்டாடப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டில் இந்த மகளி்ர் தினம் ‘செயலை விரைவுபடுத்துங்கள்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகின்றது.

சர்வதேச மகளிர் தினம் என்பது வழக்கமான ஒரு கொண்டாட்டத்திற்கு அப்பாற்பட்டு பாலின ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கான ஒரு தினமாக பார்க்கப்படுகிறது.

இது பெண் அதிகாரத்திற்கான உலகளாவிய ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளையில், பெண்களுக்கு இருக்கும் பொருளாதார சமத்துவமின்மை, அரசியல், பிரதிநிதித்துவமின்மை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

பெண்களின் உரிமைகளை வடிவமைக்கும் சட்டங்கள் மற்றும் சமூக மாற்றங்களைக் கொணர்வதில் நாம் உறுதியுடன் செயல்படவேண்டும் என்பதை இந்த நாள் நமக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பெண்களின் உரிமைகளைப் பொறுத்தவரையில் இதுவரை கண்ட சாதனைகளை மதிப்பிடுவதற்கும், தடைகளை எதிர்கொள்வதற்கும், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் ஒரு முக்கிய தருணமாக இந்நாள் உள்ளது.

நம்மால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தினம், ஒரு நூற்றாண்டு காலப் பெண்களுடைய போராட்டங்களின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பது தெரியுமா?

1908ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி, உழைக்கும் பெண்களின் வேலை நேரத்தைக் குறைக்கவும், கூலியை உயர்த்தவும், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோரியும், ஏறக்குறைய 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு பேரணியை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, 1910இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் என்பவர் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக பன்னாட்டு மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த அமைப்பின் சார்பில் 1911ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகள் முதல் பன்னாட்டு மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

1911லிருந்து பல நாடுகளில், பல தேதிகளில் ‘பன்னாட்டு மகளிர் மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டுவந்தது.

1975ஆம் ஆண்டுதான் மார்ச் ௮ஆம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா அறிவித்தது. அதைத் தொடர்ந்தே உலக அளவில் இது பரவ ஆரம்பித்தது.

அன்று தங்களின் வாக்குரிமைக்காகப் போராடி அதைப் பெற்றுத் தராவிட்டால் இன்று வாக்களிக்கும் உரிமையற்று வெறும் பதுமைகளாகவே இருந்து கொண்டிருப்பார்கள் பெண்கள்.

வேலை நேரத்தைக் குறைக்கச் சொல்லி அவர்கள் போராடி இருக்காவிட்டால் இன்று வெளியிலும் வீட்டிலும் பெண்களின் நேரம் சுரண்டப்பட்டிருக்கும். கொஞ்சம் உற்றுநோக்கினோமென்றால், பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உரிமைகள் எல்லாம் அவர்களேப் போராடி பெற்றவை.

பல்லாயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த இந்த போராட்டத்தை கௌரவப்படுத்தி சிறப்பிக்க சர்வதேச மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் ௮இல் கொண்டாடுகின்றோம்.

பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஆதரிக்கவும் கொண்டாடப்படும் இந்நாள், 2025ஆம் ஆண்டில், “செயலை துரிதப்படுத்து” என்ற கருப்பொருளை தலைப்பாகக் கொண்டு சிறப்பிக்கப்படுகிறது.

அனைத்துப் பெண்களுக்கும் காலைக்கதிர் இதழ் சார்பாக எமது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply