
யுத்தம் காரணமாக பல வருடங்களாக இயங்காத நிலையில் இருந்த இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு நேற்றைய தினம் (7) அமைச்சர் குழு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர் குழுவினரே சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டனர்.
இதன்போது, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா , யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
குறித்த சீமெந்து தொழிற்சாலை முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு கையளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் குழுவினரின் குறித்த விஜயம் அமைந்துள்ளது.