
எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் நேற்று (7) பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி கருத்து தெரிவித்திருந்தார்.
குறித்த தாக்குதல் பாடசாலை பெண் அதிபரின் முன்னிலையில் நடந்ததாகவும், தாக்கப்பட்ட ஆசிரியை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்த சம்பவம் இன்று காலை தமக்கு தெரியவந்ததாக குறிப்பிட்டதோடு, இது தொடர்பில் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்து இன்றைய (8) நாளுக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.