
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் துறையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கை, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ம் திகதி கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.