
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக்க மனதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
66,000 பக்கங்களுக்கு மேல் கொண்ட அறிக்கையின் தற்போதைய பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.
பிரதான குழுவின் கீழ், மேலும் பல துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவை ஏற்கனவே அறிக்கையை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன என்று தெரிவித்தார்.