
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை நாடாளுமன்றம் செய்து தரவேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். இதற்காக நாம் தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
முன்னாள் எம்.பி. சுமந்திரன் கொண்டுவந்த தனிநபர் பிரேரணை போன்ற ஒன்றை, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் யாரேனும் ஒருவர் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும்.
ஒவ்வொரு முறையும் ஆட்சி பொறுப்பை ஏற்று வருகின்ற அரசாங்கங்களிடம் இது தொடர்பான சட்ட ஏற்பாட்டை செய்து தருமாறு நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஒன்று எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லது பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கு ஒரு பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுங்கள்.
கடந்த 2014ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டதற்கு பின்னர் இன்னும் நடாத்தப்படாமல் உள்ளது.
மாகாண சபைகளின் காலம் முடிவடைந்தாலும் தேர்தல்கள் நடாத்தப்படாமல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.