இலங்கை தமிழரசு கட்சியின் வெற்றிக்கு பின்னர் சுமந்திரன் விடுத்துள்ள அறிவித்தல்!

நடைபெற்று முடிந்த 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இன்று (07) காலை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் கூறிய விடயங்கள் ஆவன,

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியீட்டியிருக்கின்றது. மக்கள் தந்த இந்த வெற்றியை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 58 சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிட்டது. இதில் குறைந்தது 40 சபைகளில் நிர்வாகங்களை நடத்துவதற்கு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஆறு மாத காலத்தில் தமிழ் மக்கள் இலங்கை தமிழரசு கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு பிம்பம் உருவாகியிருந்தது.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி வென்று விட்டது, மக்கள் ஆணை கிடைத்துவிட்டது என்றெல்லாம் கூறப்பட்டது. எனினும், ஆறு மாத காலத்தில் தற்போது மக்கள் ஆணை எங்களுக்கு கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சி பெரு வெற்றியை பதிவு செய்துள்ளது. வடக்கிலும் வவுனியாவை தவிர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் தமிழரசு கட்சி பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழ் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். விசேடமாக எங்கள் பகுதிகளில் ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுக்கின்றோம். இதன்படி, கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிப்பை உடன் மீளப் பெறவேண்டும்.

உடனடியாக இந்த வர்த்தமானி அறிவிப்பு மீளப் பெறப்பட வேண்டும். மக்கள் ஆணையுடன் இந்த கோரிக்கையை நாங்கள் விடுக்கின்றோம். எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாங்கள் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கியுள்ளோம்.

அரசாங்கம் இந்த வர்த்தமானியை மீளப் பெறாமல் இருந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி இதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply