
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த வேளையில் நேற்று (11) காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக இருந்த நிலையில், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவர் சார்பாகவும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.
அதன்படி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் காப்புறுதி நிதியம் மூலம் இறந்தவரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டது.
இந்த சம்பவத்தின் போது, விபத்துக்குள்ளான பேருந்தின் கீழே பெண்ணொருவர் சிக்கியிருந்த நிலையில், தனது ஆறு மாத குழந்தையை இடுப்பின் கீழே பாதுகாத்து வைத்திருந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
இந்த விபத்தில் தனது குழந்தை மற்றும் மனைவிக்கு அருகில் இருந்த தந்தை, ஏற்கனவே பேருந்தின் அடியில் நசுங்கி மரணித்திருந்தார்.
பல மணிநேரம் நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, தாயும் குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் நேற்று (11) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
குறித்த குழந்தை தற்போது மேலதிக சிகிச்சைக்காக பேராதனையில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை நேற்று (11) இரவு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு காயமடைந்தவர்களின் நலன் விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார். பிரதமருடன் அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார்.
விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்து வர இரத்மலானை விமானப்படை தளத்தில் இரண்டு பெல் 412 ரக ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க டெஹ்ரிவித்துள்ளார்.
அத்துடன் விபத்துக்குள்ளான பேருந்தின் பாகங்களை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து கிரேன் உதவியுடன் மீட்டதுடன் பின்னர் குறித்த பேருந்து பாகங்கள் மேலதிக விசாரணைக்காக கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு sellapatullathu.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.