நாடாளுமன்றில் அநாகரிகமாக கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் – எதிரணியினர் குழப்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேயரத்னவை நோக்கி, இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த அநாகரீகமான கருத்தொன்றை வெளியிட்டார் என குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்- எதிரணியினர் பெரும் சர்ச்சையில் ஈடுபட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பிரான ரோஹினி குமாரி விஜேயரத்ன, ஓய்வூதியப் பிரச்சினை தொடர்பாக, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன கருத்து வெளியிட்டார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தாலும், அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தடையின்றி வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

எனினும், இவரது இந்தக் கருத்தானது பொய்யானது என தெரிவித்த ரோஹினி குமாரி விஜேயரத்ன, அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க முடியுமாக இருந்தால், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரிக்கவோ அல்லது உரிய ஓய்வூதியத்தை வழங்கவோ ஏன் அரசாங்கத்தினால் முடியாமல் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதனையத்து கருத்து வெளியிட்ட உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த, இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் 13 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு- செலவுத் திட்டத்தில் தீர்வுகள் முன்வைக்கப்படும் என்று தெரிவித்ததோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேயரத்னவை மகிழ்விப்பது எவ்வாறு என தங்களுக்குத் தெரியாது என கருத்து வெளியிட்டார்.

இவர் இவ்வாறு தெரிவித்தவுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரது இந்தக் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்டவர்கள் இவரது கருத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு, இராஜாங்க அமைச்சரை சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply